திண்டுக்கல் அருகே அரசு உபரி நிலங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச்சேர்ந்த அசோக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் உபரி நிலங்கள் உள்ளன. இங்குள்ள பெரியம்மாபட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் உபரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் வளமானதாகவும், விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகவும் உள்ளன. இருப்பினும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் அரசியல்வாதிகளின் துணையுடன் தனிநபர்கள் இந்த நிலங்களிலிருந்து மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் சட்டவிரோதமாக மண் அள்ளிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இருப்பினும் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் லாரிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். அரசு நிலங்களில் இருந்து மண் எடுத்து கடத்துவதால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பழநி தாலுகாவில் அரசு உபரி நிலங்களில் மண் எடுக்கத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago