தொடர் மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் - வெள்ளக்காடான தூத்துக்குடி மாநகர் தெருக்கள் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழை இரவிலும் நீடித்தது. நேற்று பகலிலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. தூத்துக்குடி மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பிரையண்ட் நகர், சிதம்பரநகர், அண்ணாநகர், டூவிபுரம், குறிஞ்சிநகர், ராஜீவ் நகர், முத்தம்மாள் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, லூர்தம்மாள்புரம், ராஜகோபால் நகர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் 86 மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சுமார் 100 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், நகரில் மழைநீர் அதிகம் தேங்கும் 25 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து, ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் வகையில் பம்பிங் ஸ்டேசன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் நெல், வாழை மற்றும் மானாவாரி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 41.2, காயல்பட்டினம் 27, குலேசேகரன்பட்டினம் 25, விளாத்திகுளம் 28, காடல்குடி 20, வைப்பார் 27, சூரன்குடி 18, கோவில்பட்டி 53, கழுகுமலை 30, கயத்தாறு 24, கடம்பூர் 25, ஓட்டப்பிடாரம் 90, மணியாச்சி 23, வேடநத்தம் 35, கீழ அரசடி 12, எட்டயபுரம் 26.5, சாத்தான்குளம் 25, ஸ்ரீவைகுண்டம் 26, தூத்துக்குடியில் 30.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்