தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து 10 மணிநேரம் பெய்த மழையால் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து 10 மணிநேரம் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல், தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை 9 தொடங்கிய மழை மாலை 7 மணி வரை இடைவிடாது தொடர்ந்து 10 மணி நேரம் பெய்தது. தொடர்ந்து இரவும் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இந்த மழை காரணமாக நேற்று மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்தது.

மழையால் தாராசுரம் 14 மனைத்தெருவில் உள்ள பரதன் என்பவரது கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் தெற்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாவட்டத்தில் அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், உக்கடை, அம்மாபேட்டை, மருங்குளம் ஆகிய இடங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவ.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

வேதாரண்யத்தில் 163.8 மிமீ மழை

நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): வேதாரண்யம் 163.8, நாகப்பட்டினம் 152.4, திருப்பூண்டி 146.8, தலைஞாயிறு 132.2. கனமழை காரணமாக நாகப்பட்டினத்தில் 82 குடிசை வீடுகள், கீழ்வேளூரில் 24 குடிசை வீடுகள், வேதாரண்யத்தில் 3 குடிசை வீடுகள், திருக்குவளையில் ஒரு குடிசை வீடு சேதமடைந்துள்ளன.

நாகப்பட்டினத்தில் மழை காரணமாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார் என நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE