போதிய வருவாயை ஈட்டியும் - புறக்கணிக்கப்படும் பாபநாசம் ரயில் நிலையம் : அனைத்து விரைவு ரயில்கள் நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தல்

By வி.சுந்தர்ராஜ்

பாபநாசம் ரயில் நிலையத்தில் ஜனசதாப்தி, சோழன், உழவன் ஆகிய விரைவு ரயில்கள் மட்டும் நின்று செல்லும் நிலையில், மைசூர், செந்தூர், ராமேசுவரம் விரைவு ரயில்கள் கடந்த ஓராண்டாக நின்று செல்லாததால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் பாதையில் பாபநாசம் ரயில் நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வட்ட தலைநகரமாகவும், சட்டப்பேரவை தொகுதியையும், பல்வேறு வழிபாட்டு தலங்களையும் கொண்டது பாபநாசம். இங்குள்ள ரயில் நிலையம் மூலம் நாள்தோறும் 800 பயணிகள் ரயில்களில் சென்று வருகின்றனர்.

கரோனா ஊரடங்குக்கு முன்னர் இந்த ரயில் நிலையத்தில் ஜனசதாப்தி, சோழன், உழவன், செந்தூர், ராமேசுவரம், மைசூர் ஆகிய விரைவு ரயில்களும் 10 பயணிகள் ரயில்களும் நின்று சென்றன. இது இப்பகுதி ரயில் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், கரோனா ஊடரங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் முதல் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் அதே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், மைசூர், செந்தூர், ராமேசுவரம் விரைவு ரயில்கள் மட்டும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. மற்ற ரயில்கள் நின்று செல்கின்றன.

எனவே, மைசூர், செந்தூர், ராமேசுவரம் விரைவு ரயில்களை பாபநாசம் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என பாபநாசம் பகுதிமக்கள் கடந்த ஓராண்டு காலமாக இப்பகுதியைச் சேர்ந்த எம்பிக்கள் மூலமாக ரயில்வே அமைச்சர், ரயில்வே அமைச்சக அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை அந்த ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் டி.சரவணன் கூறும்போது, ‘‘கரோனாவுக்கு முன் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் பாபநாசத்தில் நிறுத்த வேண்டும் என கடந்த ஓராண்டு காலமாக கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம். ஆனால், ரயில்வே அதிகாரிகள் போதிய வருவாய் இல்லை எனக் கூறி வருகின்றனர்.

ஆனால், இந்த ரயில் நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.58 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.ஆனால், இதை மறைத்து, ரயில்வே அதிகாரிகள் ரயில்வே அமைச்சகத்துக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். கரோனா தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ள போதும், ரயில்வே அதிகாரிகள் மட்டும் பாபநாசம் ரயில் நிலையத்தில் கரோனா இருப்பதுபோல, தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

எனவே, ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்ட இந்த ரயில்களை மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா தொற்று வழிகாட்டுதல் காரணமாக பாபநாசம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படவில்லை. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். அங்கிருந்து உத்தரவு கிடைத்தும் இங்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்