தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் யூரியா உரம் இருப்பு நிலவரம் குறித்து ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமானது யூரியா உரத்தை ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் தயாரித்து வருகிறது. ஸ்பிக் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் மத்திய அரசால் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு 60 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்படுகிறது. இந்த உரங்கள் ஸ்பிக் நிறுவன முகவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
உரம் தயாரிப்பு, விநியோகம் தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற ஸ்பிக் நிறுவனத்துக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். தேவையான பணியாளர்கள் உள்ளனர். மேலும் பணியாளர்கள் தேவையென்றால் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவத்துக்கு மட்டும் 12,500 மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுகிறது. நவம்பர் மாதத்துக்கு மட்டும் யூரியா 5,000 மெட்ரிக் டன் தேவைப்படும். தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் யூரியா 33 ஆயிரம் மெட்ரிக் டன், டிஏபி 8,250 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 9,610 மெட்ரிக் டன் நடப்பு நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago