வாலாஜா பாலாறு அணைக்கட்டில் சுமார் 9,426 கன அடி அளவுக்கு இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தொடர் மழை காரணமாக காவேரிப்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளான மலட்டாறு, அகரம் ஆறு, கவுன்டன்யா ஆறு, பொன்னை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக பாலாற்றுடன் கலக்கும் கவுன்டன்யா, பொன்னையாற்றில் நீர் வரத்து அதிகமாகவே உள்ளது. இதனால், பாலாற்றை நம்பியுள்ள பொதுப்பணித்துறை ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திருப்பத்தூர், வேலூர் மாவட்ட பாலாற்றில் இருந்து அதிகப்படியான நீர்வரத்து காரணமாக வாலாஜா பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 9,426 கன அடி அளவுக்கு இரண்டு கரைகளையும் தொட்டபடி நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வெள்ளநீர் சென்றது. ஏற்கெனவே, தொடர் நீர்வரத்தால் அணையின் ஒரு கால்வாய் வழியாக காவேரிப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. காவேரிப்பாக்கம் ஏரியும் அதன் கீழ் பகுதியில் உள்ள ஏரிகளிலும் போதுமான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.
அதேபோல், வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் 3-ம் தேதி வரை இருக்கும் என்பதால் அதன் மூலமாகவும் ஏரிக்கு நீர்வரத்து இருக்கும். எனவே, காவேரிப்பாக்கம் ஏரிக்கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். வாலாஜா பாலாறு அணைக்கட்டில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்ததுடன், கரையோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago