நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை காலத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.
முகாம்களில் தங்கவைக்கப்படும் முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும். விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால் பயிர் வகைகள் கணக்கீடு செய்யப்பட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்களில் மழை நீர் எளிதாக செல்லும் வகையில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர். இதுவரை 794.90 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியை விட 78.36 மி.மீ மழை கூடுதலாக பெய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 12 இடங்கள், நகர்ப்புறங்களில் 21 இடங்கள் என மொத்தம் 33 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 58 பள்ளிக் கட்டிடங்கள், 53 திருமண மண்டபங்கள், 20 சமுதாயக் கூடங்கள், இதர கட்டிடங்கள் 9 என மொத்தம் 140 நிவாரண மையங்கள், தயார் நிலையில் உள்ளன, என்றார்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், கோட்டாட்சியர்கள் த.மஞ்சுளா, தே.இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago