கோராத்துப்பட்டி-பக்கிரிக்காடு இடையே - திருமணிமுத்தாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் : சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

By செய்திப்பிரிவு

திருமணிமுத்தாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என வீராணம் அடுத்த கோராத்துப்பட்டி பக்கிரிக்காடு பகுதி மக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ரத்தினவேலு, சேகர் உள்ளிட்டோர் கூறியதாவது:

கோராத்துப்பட்டி கிராமத்தில் திருமணிமுத்தாற்றின் மறுகரையில் பக்கிரிக்காடு பகுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பக்கிரிக்காடு பகுதியில் இருந்து கோராத்துப்பட்டிக்கு வந்து செல்ல சரியான பாதை வசதி இல்லை. மேலும், திருமணிமுத்தாற்றினைக் கடந்து தான் மறுகரையில் உள்ள ஊருக்கு செல்ல முடியும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமணிமுத்தாற்றில் ஓரளவு நீரோட்டம் இருந்ததால் ஆற்றை கடந்து நாங்கள் சென்று வந்தோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றில் பாலம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பக்கிரிக்காட்டில் இருந்து ஆற்றின் மறுகரையில் உள்ள ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம்.

சிலர் அத்தியாவசியத் தேவைகளுக்காக, ஆபத்தைப் பொருட்படுத்தாமல், வெள்ளம் பெருக்கெடுத்துள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி, மறு கரைக்கு சென்று வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து, திருமணிமுத்தாற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும், பக்கிரிக்காடு பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்