வெள்ளநீரில் மூழ்கிய 1,000 ஏக்கர் பயிர்கள் : சிவகங்கையில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

சிவகங்கை மாவட்டத்தில் மழை வெள்ளநீரில் 1,000 ஏக்கர் நெல், மிளகாய் பயிர்கள் மூழ்கின.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபரில் சராசரியாக 172 மி.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபரில் 223.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தில் 2.45 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 678 பொதுப்பணித் துறை கண்மாய்கள் உட்பட 4,966 கண்மாய்கள் உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு வடிநிலக் கோட்டத்தில் 32 பொதுப்பணித் துறை கண்மாய்கள், சருகனியாறு வடிநிலக் கோட்டத்தில் 22 பொதுப்பணித் துறை கண்மாய்கள், பெரியாறு பாசனம் மூலம் 11 கண்மாய்கள் என 65 கண்மாய் முழுமையாக நிரம்பியுள்ளன. இதுதவிர ஒன்றியக் கண்மாய்களில் 50 சதவீத கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

நிரம்பிய கண்மாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகின்றன. இதனால் மணிமுத்தாறு, உப்பாறு உள்ளிட்ட சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரியூர் அருகே தும்பைபட்டி மணிமுத்தாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மானாமதுரை செய்களத்தூர், இளையான்குடி, சாலைக்கிராமம், சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தொடர் மழையால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி அரளிக்கோட்டை கண்மாய், செய்களத்தூர் கண்மாயை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: மணிமுத்தாறு குறுக்கே கட்டப்பட்ட 10 தடுப்பணைகள் மூலம் 144 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் 6,470 ஏக்கர் பாசன வசதி பெறும். மானாமதுரை அருகே செய்களத்தூர் பகுதியில் 150 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE