கொல்லிமலை அடிவாரத்தில் வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் ஏரிக்கு செல்லும் தண்ணீர் அருகே விளைநிலங்களில் புகுந்ததால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மலையின் அடிவாரத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஏரி நிரம்பி வாய்க்கால் வழியாக அருகே உள்ள காவக்காரன்பட்டி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் தண்ணீர் செல்லும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறும் நீர் அருகே உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது.
50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மரவள்ளி, பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடனடியாக சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து தற்காலிகமாக வாய்க்கால் உடைப்பை சரிசெய்துள்ளனர். கால்வாயை நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago