தொடர் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். திருமணிமுத்தாறு மற்றும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உரிய பாதுகாப்பின்றி காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளித்தல், நீச்சல் அடித்தல் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது.
கொல்லிமலையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது. மலைப் பகுதிகள் மற்றும் மலையடி வாரத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். அபாயகரமான பகுதிகளில் நின்று செல்ஃபி எடுக்கக்கூடாது.
மண் சுவரால் கட்டப்பட்டுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மழைக்காலங்களில் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும். திருமணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலங்களை கடக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொது மக்கள் அவசரகால உதவிக்கு 1077 மற்றும் 04286-281377 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago