பிசான சாகுபடிக்காக 5,781 ஏக்கர் நிலங்களுக்கு - கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : நாங்குநேரியில் 6, ராதாபுரத்தில் 10 கிராமங்கள் பயன்

பிசான சாகுபடிக்காக கொடுமுடி யாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

திருக்குறுங்குடி கிராமம் களக்காடு வனப்பகுதியில் கொடுமுடியாறு, கோதையாறு ஆகிய இரண்டு ஆறுகள் தாமரையாறுடன் இணைகின்றன. இந்த இடத்தில் கொடுமுடியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், நாங்குநேரி வட்டத்தில் 6 கிராமங்களும், ராதாபுரம் வட்டத்தில் 10 கிராமங்களும் பயனடைகின்றன. சமீபத்திய மழையால் கொடுமுடியாறு அணை நிரம்பியுள்ளது. இதிலிருந்து, பாசனத்துக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். அவர் கூறியதாவது:

கொடுமுடியாறு அணையில்இருந்து செல்லும் வள்ளியூரான்கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் நேரடியாக பாசனம் பெறும் 240.25 ஏக்கர், குளத்துப்பாசனம் மூலம் 2,517.82 ஏக்கர் மற்றும் வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3,231.97 ஏக்கர் என மொத்தம் 5,781 ஏக்கர் நிலங்களுக்கு, நடப்பாண்டு பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வரும் 7.3.2022-ம் தேதி வரை 100 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறந்துவிடப்படும். எதிர்வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கவில்லையென்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சிமுறையில் வழங்கப்படும்.

நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, சிற்றாறுவடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சுமதி, உதவிசெயற்பொறியாளர் மணிகன்டராஜ், உதவி பொறியாளர் மூர்த்தி,நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்