இடைவிடாத மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : விளைச்சல் குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை நீடிக்கிறது. கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் நேற்று திருநெல்வேலி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், கடைகளில் வியாபாரம் மந்தமாகியது. திருநெல்வேலி மாநகரில்தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் திருநெல்வேலிமற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. திருநெல்வேலி நயினார்குளம் மொத்த சந்தையில் கடந்தஒருவாரத்துக்குமுன் தக்காளி ஒருகிலோ ரூ.35 வரை விற்பனையான நிலையில் நேற்று கிலோ ரூ.55-க்குவிற்பனை செய்யப்பட்டது. சில்லறை கடைகளில் கிலோ ரூ.95வரை விற்பனையானது. இதுபோல் கத்தரிக்காய் கிலோ ரூ.90-க்கு விற்பனையானது. மற்றகாய்கறிகளின் விலையும் உயர்ந்துவருவது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 135.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 922 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1358 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE