வடகிழக்கு பருவமழை காரணமாக - பாலாற்றில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளம் : கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு கிடுகிடுவென உயர்ந்தது. பாலாறு அணைக்கட்டில் நேற்று மாலை 7,455 கன அடிக்கு வெள்ள நீர் கடந்து சென்ற நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகொண்டா அருகே மோர்தானா வலதுபுற கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து சாலையில் மண்அரிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்க உத்தரவிட்டார்.

தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் ஓடும் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளான கவுன்டன்யா, பொன்னை ஆறு, மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அளவு அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி பாலாற்றில் விநாடிக்கு 1,500 கன அடியும், கவுண்டன்யா ஆற்றில் 1,300 கன அடியும், அகரம் ஆற்றில் 600 கன அடியும், மலட்டாற்றில் 1,000 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பள்ளிகொண்டா அருகே பாலாற்றிலிருந்து செதுவாலை ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாயையும், மேர்தானா வலதுபுற கால்வாயை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்ததுடன், இரு கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை விரைவாக சரி செய்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வேலூர் மாநகராட்சி

வேலூர் மாநகராட்சியில் கன்சால்பேட்டை, இந்திரா நகர் பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்ததுடன் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

கிடுகிடுவென உயர்ந்த வெள்ளம்

தமிழக-ஆந்திர எல்லையில் பெய்த மழையால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பி உபரி நீர் நேற்று காலை 6 மணியளவில் 2,142 கன அடிக்கு திறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக உயர்ந்து 9.30 மணிக்கு 3,053 கனஅடியாகவும், 11 மணிக்கு 3,676 கன அடியாகவும், நண்பகல் 12 மணிக்கு 4,609 கன அடியாகவும், பிற்பகல் 1 மணிக்கு 5,317 கன அடியாகவும், மாலை 4 மணிக்கு 6,364 கன அடியாகவும் உயர்ந்தது. பொன்னையாற்றில் வெள்ளநீர் கடந்து செல்வதை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து நேற்று காலை 6,922 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இது நண்பகல் 12 மணிக்கு 7,122 கன அடியாகவும், மாலை 4 மணிக்கு 7,455 கன அடியாகவும் உயர்ந்தது. பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வருவாய்த்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர்.

சாலை மறியல்

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. அங்குள்ள பிரதான சாலை தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, காவல் துறை யினர் சமாதானம் செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்