3-வது நாளாக கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் அவதி - திருப்பூரில் பிரதான சாக்கடை கால்வாய் கட்டித்தர வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகரில் நேற்று 3-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டுஎஸ்.பி.நகரில் உள்ள 5 வீதிகளில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீரும், சாக்கடைக் கழிவுநீரும் சூழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.பி நகரில் உள்ள 5 வீதிகளில் சாக்கடைக் கால்வாய் சிறிய அளவில் கட்டப்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் குடியேறிய நிலையில், அதற்கேற்ப சாக்கடைக் கால்வாய் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் அருகருகே உள்ள வீதிகளில் இருந்து அடித்துவரும் வெள்ளநீர், சாக்கடை கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.

தற்போது 3 நாட்களாக பெய்துவரும் மழையால் சாக்கடைக் கழிவுநீரும், மழைநீரும் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர்கிராந்திகுமார் பாடிக்கு, அவரது‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார்அளித்துள்ளோம், என்றனர்.இந்நிலையில் நேற்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், சாக்கடைக் கால்வாயை உடனடியாக தூர்வார உத்தரவிட்டார். இதையடுத்து சாக்கடைக் கால்வாய் தூர்வாரப்பட்டு, வீதிகளில் தேங்கிய சேறும்,சகதியும் அகற்றப்பட்டது.

கிருமிநாசினி தெளிக்கப்பட்டதோடு, கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் புகை மருந்தும் அடிக்கப்பட்டது. பிரதான சாக்கடைக் கால்வாயை விரைவில் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

தொடர்ந்து 15-வது வார்டு கரியகாளியம்மன் கோயில் வீதியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே10 வீடுகள் மற்றும் அப்பகுதி விநாயகர் கோயில் அருகே மழைநீர் புகுந்த குடியிருப்புப் பகுதிகளையும் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார். தொடர்ந்து தண்ணீர் புகாதபடி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாநகராட்சி உதவிஆணையருக்கு உத்தரவிட்டார்.

ஆணையர் ஆலோசனை

திருப்பூர் மாநகரில் ஏற்பட்டுள்ளமழை வெள்ள பாதிப்பு தொடர்பாக நேற்று அலுவலர்களுடன், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆலோசனை மேற் கொண்டார். 4 மண்டலஅலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைக் கால சீரமைப்புப் பணிகள் மற்றும்நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளம் ஏற்படும்போது குடிநீர் குழாய்கள் சேதமடையாமல் இருக்க நிரந்தர தீர்வுகாண வேண்டும். மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் மண் மூட்டைகளை அடுக்கிவைக்க வேண்டும். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக அடையாளம் கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கும் வகையில் பள்ளிகளை முகாம்களாக தயார் செய்ய வேண்டும். தங்குதடையின்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவும், முகாமில் தங்கியுள்ள மக்களுக்குதேவையான அடிப்படை வசதிகள்தொடர்ந்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதேபோல மழை பாதிப்பு தொடர்பாக ‘1077’ என்ற எண்ணுக்கு மக்கள் அளிக்கும் புகார்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

களப்பணியில் 300 பேர்

மாநகரில் தொடர் மழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி, டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் 75 பேர் வீதம் 300பேர் நியமிக்கப்பட்டு, களப்பணியாற்றி வருகின்றனர். கொசுப்புழு ஒழிப்பு, அபேட் மருந்து ஊற்றுவது, புகை போடுவது, மருந்து தெளித்தல்உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்,’’ என்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, ‘‘தற்போது காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைபெறுபவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. 4 பேருக்கு டெங்குவுக்கு சிகிச்சை அளித்துவந்த நிலையில், இருவர் உடல்நலன் தேறிவிட்டனர். இருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்