கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வாதாரமாக இருந்து வரும் பஞ்சலிங்க அருவியின் பராமரிப்புப் பணியை மலைவாழ் மக்களிடமே ஒப்படைக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலை செட்டில்மென்ட்டை சேர்ந்த எம். மணிகண்டன் தலைமையிலான மலைவாழ் மக்கள், திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
திருமூர்த்திமலை செட்டில் மென்டில் 110 மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றன. செட்டில்மென்டில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழு அமைத்து, சுற்றுலா தலமான பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான விவரங்களை தெரிவித்து வந்தோம்.
அதற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 மட்டும் கட்டணம் வசூலித்து வந்தோம். இதன்மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் கணவரை இழந்த பெண்கள் உட்பட 10 பேர் சம்பளம் பெற்று வந்தனர்.
எஞ்சிய பணத்தை வங்கியில் செலுத்தி, அதை மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும், அடிப்படை தேவைகளையும் செய்து வந்தோம். அரசியல் கட்சியினரின் தலையீடுகாரணமாக தற்போது இக்குழுநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலாகஎங்களின் வாழ்வாதாரமாக உள்ள பஞ்சலிங்க அருவியின் பராமரிப்புப் பணிகளை தொடர்ந்துமேற்கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
அதேபோல அமணலிங் கேஸ்வரர் கோயிலிலும் மலைவாழ் மக்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையில் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் இயங்கத் தொடங்கியதில் இருந்து,மலைவாழ் மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன.
தமிழக அரசின் ஆணைப்படி அறநிலையத் துறை மூலம் கோயிலுக்கு கிடைக்கும் வருமானத்தில் 10 சதவீதம் அருகேஉள்ள குடியிருப்பு கிராம சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்க வேண்டும். இதுவரை எவ்வித பணியும் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு செய்யவில்லை. எனவே அரசு ஆணைப்படி திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago