ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித் துறை சார்பில் பயிற்சி பெற்ற 107 மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 287 மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் இணைய வழியாக நடத்தப்பட்டது. மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் பயிற்சி பெற்ற 287 மாணவர்களில் 107 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இத்தேர்வில் பரமக்குடி அரசு உதவி பெறும் பள்ளி மாணவி ஆர்.சர்சிதா 480 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். எமனேஸ்வரம் அரசுப்பள்ளி மாணவி வி.எஸ். பிரபாவதி 250 மதிப்பெண்கள் எடுத்து அரசுப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், நீட் ஒருங்கிணைப்பாளர், பயிற்சி அளித்த பாட வல்லுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் ஆகியோருக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து பாராட்டுத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago