கிருஷ்ணகிரி அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து நீர்திறப்பு விநாடிக்கு 1,137 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் நீரைப் பொறுத்து கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 952 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 944 கனஅடியானது. அணையில் இருந்து நேற்று முன்தினம் பாசன கால்வாய் மற்றும் ஆற்றில் விநாடிக்கு 822 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 1,137 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணை நீர்மட்டம் 51.10 அடி உள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் நெடுங்கல் தடுப்பணையில் இருந்து பாரூர் பெரிய ஏரிக்கும் செல்கிறது.

நேற்று பெரிய ஏரியில் நீர்வரத்து விநாடிக்கு 67 கனஅடியாக இருந்தது. மேலும் ஏரி நிரம்பியுள்ளதால், ஏரிக்கு வரும் நீர்வரத்து முழுவதும் கால்வாய்கள் வழியாக இணைப்பு ஏரிகளுக்கு செல்கிறது.

இதனிடையே மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

20 ஆண்டுக்கு பின்னர் நிரம்பிய ஊத்தங்கரை கூடப்பட்டான் ஏரி

ஊத்தங்கரை ஒன்றியம் மிட்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் சின்னத்தள்ளபாடி. இக்கிராமத்தில் கூடப்பட்டான் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் ஆதாரம் மூலம் மிட்டப்பள்ளி, சின்னத்தள்ளபாடி, சமகவுண்டவலசை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஏரி நீரின்றி வறண்டிருந்தது.

இதனால், இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், ஜவ்வாது மலை, அங்குத்தி சுனை பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் கூடப்பட்டான் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்