தமிழகத்தில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்ததால் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப் படவில்லை.
அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், வருகிற 9-ம் தேதி குற்றாலம் அருவிகளில் தடையை மீறி குளிக்கும் போராட்டத்தை தென்காசி மாவட்ட சிஐடியு அறிவித்தது.
இதை யடுத்து, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள், சிஐடியு நிர்வாகிகள் அயூப்கான், வேல்முருகன், தர்மராஜ், வன்னியபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக கடுமையான துயரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு கடை வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சிஐடியு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் குறித்து உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றும், குற்றாலம் அருவிகளில் பொது மக்கள் குளிக்க அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் வருகிற டிசம்பர் 10-ம் தேதிக்குள் அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, அருவிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாக சிஐடியு நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago