பேராவூரணி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள - காட்டாற்று தரைப்பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் : உடனடியாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

பேராவூரணி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள காட்டாற்று தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, உடனடியாக புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிற்றம்பலம் வழியாக பேராவூரணி செல்லும் சாலையில் சித்தாதிக்காட்டில் உள்ள காட்டாற்று தரைப்பாலம், ஒட்டங்காடு வழியாக பேராவூரணி செல்லும் சாலையில் செல்வவிநாயகபுரத்தில் உள்ள காட்டாற்று தரைப்பாலம் ஆகியவை அரை நூற்றாண்டு பழமையான பாலங்களாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், அண்மையில் இந்தப் பாலங்களை மூழ்கடித்தபடி காட்டாற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது. தற்போது, சற்று நீர்வரத்து குறைந்த நிலையில் செல்வவிநாயகபுரம் காட்டாற்று தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்பாலத்தில் 3 இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியுள்ளது.தண்ணீர் வழியும் குழாய்களும் சேதமடைந்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தப் பாலம் வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், பேருந்துகள், தனியார் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

எனவே, ஏதேனும் அசம்பா விதம் நிகழும் முன் இந்தப் பாலத்தில் போக்குவரத்தை தடை செய்வதுடன், அதை இடித்துவிட்டு, உடனடியாக புதியபாலம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே. ஆபத்தான நிலையில் உள்ள இந்தப் பாலத்தை பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், இந்தப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் தகவல் கொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE