தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழு தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டப் பொருளாளர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் வறண்ட பிரதேசமாக, தாராபுரம் வட்டம் உள்ளது. இதன் ஒருபகுதி பாசன வசதிபெற, உப்பாறு அணை பிஏபி திட்டத்தில் ஊட்டு நீர் பெறும் அணையாக ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்டது. பிஏபி திட்டத்தின் கீழ் பயன்பெறும் பாசனப் பரப்பு விரிவடைந்த பின்னர், பிஏபி பாசன பகுதிக்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் உப்பாறு அணைக்குதண்ணீர் பெறுவதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
கடந்த 50 அண்டுகளில் 42 ஆண்டுகள் அமராவதி அணை பருவமழைக் காலங்களில் அணை நிரம்பி, உபரிநீராக ஆற்றில் செல்கிறது. இதை பயன்படுத்தி உப்பாறு அணைக்கு நீரை கொண்டுசென்று, அங்கிருந்து வட்டமலைக்கரை அணைக்கு கொண்டு செல்லலாம் என, கடந்த திமுக ஆட்சியில் ரூ.18 கோடிக்கு போடப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது. தற்போது அமராவதி அணையில் இருந்து கடந்த ஜூலை 23-ம் தேதி முதல்3 மாதத்துக்கு மேலாக உபரியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நவ.1-ம் தேதிமுதல் விநாடிக்கு 2,000கனஅடி நீர் வெளியேறி, வீணாக கடலில் கலக்கிறது. இதில் ஒரு டிஎம்சி நீர் இருந்தால்கூட உப்பாறுஅணை மற்றும் வட்டமலைக்கரை அணையை நிரப்பமுடியும் என்பதால், அமராவதி ஆறு- உப்பாறுகால்வாய் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago