பிஏபியில் சமச்சீர் பாசனத்தை அமல்படுத்த கோரி இன்று போராட்டம் : வெள்ளகோவில் கிளை விவசாயிகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை மூலம் செயல்படுத்தப்படும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர்நிலங்கள் பாசனம் பெற்றுவருகின்றன. ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறப்பின்போதும், காங்கயம் அருகே உள்ள வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு கொடுக்க வேண்டிய 240 கனஅடி நீரில், 50 சதவீதமான 120 கனஅடி தண்ணீர்கூட வருவதில்லை என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது 4-ம் மண்டலம், 4- வது சுற்றுக்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சமச்சீர் நீர் வழங்குவதை உறுதி செய்யக்கோரி இன்று (நவ.7) காங்கயம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், பிஏபி வெள்ளகோவில் கிளை விவசாயிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் பொதுப்பணித் துறையினர் பங்கேற்கததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லை யெனில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்தும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி ப.வேலுச்சாமி கூறும்போது, ‘‘சமச்சீர் பாசனத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திருடப்படுகிறது. எனவே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இதில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பர்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்