தொடர் விடுமுறை காரணமாக - கிருஷ்ணகிரி அணை, படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் :

By செய்திப்பிரிவு

தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை கிடைத்ததால் கிருஷ்ணகிரிஅணை பகுதி மற்றும் அவதானப்பட்டி படகு இல்லத்துக்கு ஏராளமானோர் தங்கள் குடும்பங்களுடன் படையெடுத்தனர்.

தீபாவளி பண்டிகை கடந்த 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மறுநாளும் அரசு விடுமுறையை அறிவித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்கள் என்பதால் தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை மக்களுக்கு கிடைத்துள்ளது.

விடுமுறை தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களான கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம், கிருஷ்ணகிரி அணை, பூங்கா மற்றும் அணைக்கு மேற்புறத்தில் உள்ள மீன் கடைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட கூடுதலாக காணப்பட்டது.

கிராமப் பகுதிகளிலிருந்து குடும்பங்களுடன் தங்கள் வாகனங்களில் வந்தவர்கள் அணைப்பகுதி பூங்காவில் தங்கள் குழந்தையுடன் நேரத்தை கழித்து மகிழ்ந்தனர். அணைப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதையும், அணையின் சிறிய கால்வாய்களில் தண்ணீர் திறந்துள்ளதையும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

கரோனா காலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பங்களுடன் வெளியில் செல்லாமல் இருந்த மக்கள் தற்போது குடும்பத்துடன் வெளியில் வந்து பண்டிகையை கொண்டாடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று வெளியூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்காவை ஒட்டியுள்ள படகுஇல்லத்தில் பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு சவாரி செய்தவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டன. இதேபோல் மீன் வறுவல் கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கிருஷ்ணகிரி அணை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்