ஓசூரில் மானாவாரி கேழ்வரகு பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி : வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை

ஓசூர் வட்டத்தில் மானாவாரியில் பயிரிட்டுள்ள கேழ்வரகு பயிரில் பரவலாக காணப்படும் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஓசூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பது:

ஓசூர் வட்டத்தில் கேழ்வரகு பயிர் மிகவும் பிரதான பயிராக பயிரிடப்படுகிறது. ஏனெனில் கேழ்வரகு ஓசூர் வட்டார மக்களின் அத்தியாவசிய உணவு பயிர். ஓசூர் வட்டாரத்தில் கேழ்வரகு பயிர் சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழை பெய்து கொண்டிருப்பதாலும் அதிக ஈரப்பதத்தினாலும் கேழ்வரகு பயிரில் குலை நோய் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது.

நோயின் தீவிர தாக்கத்தில் பயிர் காய்ந்து அல்லது எரிந்தது போல தோற்றமளிக்கும். கேழ்வரகு பயிரில் பட்டை வெளிவந்த பின்பு இந்நோய் ஏற்பட்டால் பயிர் குட்டையாக வளரும். பட்டையின் கழுத்துப் பகுதியில் கருப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றி உதிர்ந்துவிடும். அல்லது பகுதி மட்டுமே பட்டை பிடிக்கும். பயிரின் கழுத்து பகுதியில் பிளவு ஏற்பட்டு பட்டை ஒடிந்து விடும். கணுகருகல் அல்லது கணுப்பகுதியில் கருப்பாகி ஒடிந்து விடுவது போன்றவை குலை நோய் பாதிப்பினால் ஏற்படும்.

குலை நோயினை ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். கேழ்வரகு விதையை கேப்டான் (அ) திரம் 4 கிராம் (அ) கார்பன்டாசிம் 2 கிராம் மூலமாக ஒரு கிலோ கேழ்வரகு விதையை நேர்த்தி செய்யலாம். சூடோமோனாஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணியை 2 கிலோ லிட்டர் தண்ணீரில் கலந்து பாதிப்பு தென்பட்ட உடனேயே தெளிக்க வேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் பூக்கும் தருவாயில் தெளிக்க வேண்டும். அல்லது ட்ரைசைக்ளசோல் 200 கிராம் (அ) அசோக்சிஸ்ரோபின் 200 மிலி (அ) கார்பன்டாசிம் 2 கிராம் - ஏக்கருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

இந்த வழி முறைகளை பயன்படுத்தி ஓசூர் வட்ட விவசாயிகள் மானாவாரியில் பயிரிட்டுள்ள கேழ்வரகு பயிரில் தென்படும் குலை நோயை கட்டுப்படுத்தி அதிகமகசூல் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்