போலீஸாரிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த - கூலித் தொழிலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

பட்டாபிராம் அருகே சுடுகாட்டில் சூதாட்டம் ஆடியபோது, போலீஸார் வந்ததால் தப்பி ஓட ஆற்றில் குதித்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமை அடுத்த சோராஞ்சேரி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சரவணன் (46). இவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

சரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாபிராம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டாபிராம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். அப்போது, போலீஸாரைக் கண்டதும் சீட்டாடிக் கொண்டிருந்த சரவணன் மற்றும் நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடினர். இதில், சரவணன் மட்டும் அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்தபோது, தண்ணீரில் வளர்ந்துள்ள செடி, கொடிகளில்சிக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட அவரது நண்பர்கள் கிராமத்தில் உள்ள சரவணனின் உறவினர்கள், பொதுமக்களிடம் சென்று தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஓடி வந்து தேடினர். ஆனால், சரவணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, ஆவடியில் உள்ள தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படகு மூலம் சரவணனைத் தேடினர். இந்நிலையில், அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டனர். இதுதொடர்பாக, பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்