மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிய ரயில் பாதைப் பணிகள், இரட்டை ரயில் பாதைப் பணிகள், அகல ரயில் பாதைப் பணிகள், புதிய பாம்பன் பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அருப்புக்கோட்டை வழியாக அமைக்கப்படும் மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி அருகே மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை ரயில் பாதைப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மதுரை - போடி நாயக்கனூர் அகல ரயில் பாதைத் திட்டத்தில் ஆண்டிபட்டி - தேனி பிரிவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த பிரிவில் மீதமுள்ள 15 கி.மீ. தூர தேனி - போடி நாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வரு கின்றன.
இந்தப் பகுதியில் 32 சிறிய பாலங்கள் கட்டும் பணி டிசம்பரில் நிறைவடையும்.
கோவில்பட்டி - துலுக்கப்பட்டி இடையே நடைபெற்று வரும் இரட்டை அகல ரயில் பாதைப் பணி டிசம்பரில் நிறைவடையும்.
மதுரை - திருமங்கலம் இடையேயான இரட்டை அகல ரயில் பாதைப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவடையும்.
புதிய பாம்பன் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நடுவில் கப்பல்கள் சென்றுவர வசதியாக செங்குத்தாக மேலே சென்று வரும் வகையில் அமைக்கப்படும் ரயில் பாதைக்கான வரைபடம், மும்பை ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago