பருவமழையின் தீவிரம் குறைந்ததால் - குமரியில் கும்பப்பூ நெல் சாகுபடி பணி மும்முரம் : 3,500 ஹெக்டேரில் நடவுப்பணி நிறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை குறைந்துள்ள நிலையில் கும்பப்பூ நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. 3,500 ஹெக்டேர் வயல் பரப்பில் நாற்று நடவு பணி நிறைவடைந்துள்ளது. மேலும் 3,000 ஹெக்டேரில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை நடப்பாண்டு கைகொடுத்துள்ளது. சூறைக்காற்று இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள முக்கிய நீராதாரங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உட்பட அனைத்து அணைகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.

3,500 ஹெக்டேரில் நடவு நிறைவு

தற்போது மழையின் தீவிரம் குறைந்திருப்பதால் கும்பப்பூ சாகுபடி பணி மும்முரமாக நடந்துவருகிறது. நடவு செய்த 155 நாட்களில் அறுவடை பருவத்தை எட்டும் பொன்மணி நெல் ரகம் தற்போது நடவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 6,500 ஹெக்டேர் வயல் பரப்புகளில் இதுவரை 3,500 ஹெக்டேருக்கு மேல் நடவு பணி முடிந்துள்ளது. திருப்பதிசாரம், இறச்சகுளம், பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, சுசீந்திரம், பெரியகுளம் போன்ற பகுதிகளில் நடவுப் பணி நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள 3,000 ஹெக்டேர் பரப்பில் நடவு செய்யும் பொருட்டு வயலை உழுது, பண்படுத்தி சீரமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வேம்பனூர், இரணியல், நெல்லிகுளம், மற்றும் கடைமடை பகுதிகளான அஞ்சுகிராமம், வழுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இப்பணி நடந்து வருகிறது.

இரு வாரங்கள் தாமதமாக நடவு செய்யும் வயல்களில் 135 நாட்களில் அறுவடை பருவத்தை எட்டும் திருப்பதிசாரம் 3 (டிபிஎஸ்-3) என்ற நெல் ரகத்தை சாகுபடி செய்ய வேளாண்துறை பரிந்துரை செய்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் டி.பி.எஸ்.-3 நெல் ரகத்தை பயிரிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடக்கத்தில் பயிருக்கு தேவையான யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு நிலவியதாக புகார் எழுந்தது. தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் வேளாண்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாற்று நடவு செய்த பின்னர் யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கு கலந்து உரமிடுவர்.

இதனால் வேப்பம் புண்ணாக்கின் தேவையும் அதிகரித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் கும்பப்பூ சாகுபடி பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நெல் கொள்முதலின் போது ஈரப்பதம் நிர்ணயிப்பதில் அரசு தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்