தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்காத - தனியார் நிறுவனத்துக்கு ரூ.36 லட்சம் அபராதம் : தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் விதிகளை முறையாக பின்பற்றாத தனியார் நிறுவனத்துக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதித்து தேசியபசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த2017-ம் ஆண்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.பி.முத்துராமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் இயங்கி வரும் தூத்துக்குடி அல்காலி கெமிக்கல் நிறுவனம் நீர் மற்றும் காற்று மாசு கட்டுப்பாட்டு சட்ட விதிகளை கடை பிடிக்காததால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இந்த ஆலையை இயக்க கடைசியாக கடந்த 2014-ம்ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இசைவாணை பெறப்பட்டது. அது கடந்த 2015-ம்ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. அதன் பின் அந்த இசைவாணையை புதுப்பிக்காமல் நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டை நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து, நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டிருந்தனர். இக்கூட்டுக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவனத்தை இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பிக்காமல் மொத்தம் 453 நாட்கள் இயங்கி மாசு ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்கான இழப்பீடாக ரூ.36 லட்சத்து 24 ஆயிரம் வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர்முன்னிலையில் கடந்த அக்.25-ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்காமல் செயல்பட்டதற்காக தொடர்புடைய நிறுவனம் ரூ.36 லட்சத்து 24 ஆயிரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம், 6 மாததவணைகளில் செலுத்த வேண்டும். செலுத்தாவிட்டால், அதை பெறமாவட்ட ஆட்சியருடன் இணைந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அடிக்கடி ஆய்வு செய்யவேண்டும். விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்