கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் கிராமத்தில் பரோடா வங்கியின் ஏடிஎம் உள்ளது.

இந்த ஏடிஎம் மையத்துக்கு நேற்று அதிகாலை 2.48 மணிக்கு தலையில் பிளாஸ்டிக் கேரி பேக், முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் செல்ல முயற்சி செய்தார். அரை மணிநேரம் கடும் முயற்சி செய்த பின்னர், ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை திருட முடியாததால், கடப்பாரையை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர் சென்று விட்டார். அந்த ஏடிஎம் மையத்துக்கு நேற்று காலை வந்த அப்பகுதி பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் போலீஸார், அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஏடிஎம் மையத்தில் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தனர்.

மேலும், அங்கு பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தபோது, அதிலிருந்த ரூ.2.5 லட்சம் ரொக்கம் பாதுகாப்பாக இருந்தது தெரியவந்தது. பின்னர், அப்பணத்தை இயந்திரத்தில் இருந்து மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்