பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உடைந்து நொறுங்கிய விசைப்படகு :

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் ஒன்றொடு ஒன்று மோதியதில் ஒரு விசைப்படகு உடைந்து நொறுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 விசைப்படகுகள், 300 ஃபைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அனைத்து விசைப்படகுகளும் பழையாறு துறைமுகத்தில் படகு தளத்தில் நிறுத்தப்படும்.

இந்நிலையில், பழையாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், வேகமாக வீசிய சூறைக் காற்றின் வேகத்தால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இதில் பழையாறு சுனாமி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(60) என்பவரது விசைப்படகின் ஒரு பகுதி உடைந்து நொறுங்கியது. மேலும், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 விசைப்படகுகளும் லேசான சேதமடைந்தன.

உடைந்த ராஜேந்திரனின் விசைப்படகின் மதிப்பு ரூ.20 லட்சம் என்றும், பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து விசைப் படகு உரிமையாளர்கள் கூறும்போது, "பழையாறு படகு அணையும் தளம் தற்போது மணல் மேடாகி உள்ளது. எனவே, படகு நிறுத்தும் இடத்தை மேம்படுத்தி தர வேண்டும்" என்றனர். தகவலறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், மீன்வளத் துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், மீன்பிடி ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் நேற்று பழையாறு துறைமுகத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘படகு சேதம் குறித்து மீன்வளத் துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். இது குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்