தெருக்களில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீர் : மயிலாடுதுறை நகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை நகராட்சியில் புதை சாக்கடைகள் சரியாக பராமரிக்கப்படாததால், தெருக்களில் வழிந்தோடும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பூம்புகார் சாலை, வள்ளலார் மேலவீதி, எடத்தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் புதை சாக்கடை திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடி வருகிறது. இதனால், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சி மையத்தின்(ராஜன் தோட்டம்) வாசலில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக புதை சாக்கடை திட்ட குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ஆள் இறங்கு துளை வழியாக கழிவுநீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. இதனால் இந்த பயிற்சி மையத்துக்கும் வரும் பயிற்சியாளர்கள், நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த பயிற்சி மையத்துக்கு மிக அருகில் தான் நகராட்சி ஆணையர், பொறியாளர் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் சாக்கடை அடைப்பை சரிசெய்ய நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

மயிலாடுதுறை நகராட்சியில் செயல்படுத்தப்பட்ட புதை சாக்கடை திட்டத்தில், 15 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது 27 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தெருக்களில் மழைநீர் தேங்கினால், உடனே அப்பகுதி பொதுமக்கள், புதை சாக்கடை தொட்டி மூடியை அகற்றிவிட்டு, அதில் மழைநீரை திறந்துவிடுகின்றனர். மேலும், புதை சாக்கடை திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள 8 கழிவுநீர் சுத்திரிப்பு நிலையங்களில், கழிவுநீரை உறிஞ்ச ஒரு மோட்டாரும், வெளியேற்ற ஒரு மோட்டாரும் என தலா 2 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு மோட்டார் பழுதானால்கூட, அவற்றை உடனடியாக பழுதுநீக்கம் செய்வதில்லை. இதனால்தான் தெருக்களில் கழிவுநீர் வழிந்து ஓடும் நிலை இருந்துவருகிறது. இதுதொடர்பாக நகராட்சியில் முறையிட்டால் நிதி இல்லை எனக் கூறுகின்றனர் என்றார்.

மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கூறியது:

மயிலாடுதுறை மட்டுமின்றி புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில், இப்பணியை கண்காணிப்பதற்கு என்றே ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும். இதுதவிர ஏற்கெனவே உள்ள பணியாளர்களை விடுத்து, புதை சாக்கடை சீரமைப்பு, பராமரிப்பு பணிகளுக்கென தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை தீரும் என்றார்.

இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலுவிடம் கேட்டபோது, அவர் கூறியது: கழிவுநீர் வெளியேற்றத்தை தடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். இது மழைக்காலம் என்பதால் சற்று தாமதமாகிறது. தற்போது மழை பெய்வது சற்று நின்றிருக்கிறது. இதே நிலை நீடித்தால், இரண்டொரு நாட்களில் கழிவுநீர் வெளியேறுவதை நிறுத்திவிடுவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்