நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் - தேங்கியுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் : சசிகலா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா கடந்த 4 நாட்களாக தனது வீட்டில், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதரவாளர்களை சந்திப்பதோடு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அவரை சந்திக்க வரும் நபர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், எந்தக் கட்சி என அனைத்து விவரங்களையும் குறித்துக் கொண்டு, அவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்துக் கொண்ட பின்னரே, பாதுகாவலர்கள் சசிகலாவை சந்திக்க அனுப்பி வைக்கின்றனர்.

தன்னை சந்திக்கும் ஆதரவாளர்களிடம் ‘‘விரைவில் நாம் நினைத்ததை சாதிப்போம்’’ என சசிகலா கூறி வருகிறார்.

கடந்த 4 நாட்களாக அமமுக, அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களைத் தவிர, குறிப்பிடும்படி கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கவில்லை.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் நேற்று சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது:

கடந்த சில நாட்களாக தஞ்சாவூரில் என்னை சந்தித்தவர்கள் முக்கியமான கோரிக்கைகளை வைத்தார்கள், அதாவது, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாகவும், அவை மழையில் நனைந்து ஈரமாகி முளைத்துவிட்டதால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வேதனையைத் தெரிவித்தனர்.

டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடந்துவரும் நிலையில், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதாகவும், தொடர் மழையால் நெல் மணிகள் முளைத்துவிட்டதால், கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்