அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் - கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு

By செய்திப்பிரிவு

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஆட்சியர், முகாமில் பங்கேற்கும் நபர்கள் குறித்தும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

பின்னர், அருகில் இருந்த புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்ற ஆட்சியர், அங்குள்ள பிரிவுகளில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா? என்றும் விசாரித்தார்.

இந்த ஆய்வின்போது உடனிருந்த மருத்துவ கல்லூரி முதல்வர் செல்வியிடம், ‘மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் முகாமில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்’ என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

புறநோயாளிகள் பிரிவில் தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வதால் கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்யும்படியும் ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்