வேலூரில் காதல் விவகாரத்தில் - தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : கொலை வழக்காக மாற்றி விசாரணை

By செய்திப்பிரிவு

வேலூரில் காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து பாகாயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சாயிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (18) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் சிறுமியின் உறவினர்கள் இருவரையும் சென்னையில் மீட்டனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்தது. சிறுமி கடத்திய வழக்கில் காவல் துறையினர் மெத்தனமாக இருந்த நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி சிறுமியின் குடும்பத்தினர் கோகுலை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த கோகுல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பான புகாரில் சிறுமியின் தந்தை ராஜகுரு உள்ளிட்ட 6 பேரை பாகாயம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையில், கோகுலை தாக்கிய அனைவரையும் கைது செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் 27-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 29-ம் தேதி சாயிநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, காவல் துறையினர் சமாதானம் செய்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து, கோகுலை தாக்கியவர்கள் மீதான அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல் துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்