உரிய விலை கிடைக்காததால் - பட்டு கூடு விவசாயிகள் ஏமாற்றம் :

வாணியம்பாடியில் உள்ள அரசுபட்டுக் கூடு அங்காடியில் விவசாயிகளுக்கு பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அரசு பட்டுக் கூடு அங்காடி இயங்கி வருகிறது. இங்கு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வளர்த்த பட்டுக் கூடுகளை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடி அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு எடுத்து வரும் பட்டுக் கூடுகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், அண்டை மாநிலங்களில் பட்டுக் கூடுகளுக்கு கிடைக்கும் விலையை விட இங்கு குறைவாக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால், இங்கு வருவதற்கு பதிலாக வெளி மாநிலத்துக்கு எடுத்து செல்கின்றனர். வாணியம்பாடி பட்டுக் கூடு அங்காடிக்கு நேற்று காலை வந்த விவசாயிகள், பட்டுக் கூடுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் 400 விவசாயிகள் பட்டுக் கூடு வளர்ப்பதாக அரசுக்கு அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், 11 விவசாயிகள் மட்டுமே பட்டுக் கூடுகளை கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் உரிய விலையை அதிகாரிகள் கொடுப்பதில்லை. வெளி மாநிலத்துக்கு சென்று பட்டுக் கூடுகளை விற்பதால் அதிக லாபம் கிடைக்கிறது.

கர்நாடக மாநிலம் ராம் நகரில் ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.670-க்கும், ஆந்திராவில் ரூ.570-க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால், வாணியம்பாடியில் ரூ.350-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. வரும் நாட்களில் பட்டுக் கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்