நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை : தீபாவளியன்று மின்சாரம் துண்டிப்பால் அவதி

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூரில் விடிய விடிய கனமழை பெய்தது. தீபாவளியன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக காலை நேரத்தில் மிதமான வெயிலும், அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.

தீபாவளி தினத்தன்று காலையில் வெயில் இருந்த நிலையில், இரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. பண்டிகை நாளான தீபாவளியன்று உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நேற்று உதகையில் காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து இருளான காலநிலை நிலவியது. பின்னர் கன மழை பெய்தது. உதகை, காந்தல் உட்பட சுற்றுப்புறபகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கனமழை பெய்தது.

மழையின் காரணமாக உதகை-குன்னூர் சாலையில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் அருகில் இருந்து சேரிங்கிராஸ் வரையிலும், கமர்ஷியல் சாலை, படகு இல்லம் சாலை, ரயில்வே பாலம் உட்பட்ட பகுதிகளிலும் மழை நீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால்,வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததோடு, வாகன போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்து காணப்பட்டது.

மழை காரணமாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், உதகை முதல் குன்னூர் வரையில் மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ்ந்தனர்.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 38 மி.மீ., மழை பதிவானது.

கிண்ணக்கொரையில் 23, அப்பர்பவானியில் 23, தேவாலாவில் 22, குந்தாவில் 17, கூடலூரில் 14, கெத்தையில் 13, எமரால்டில் 12, ஓவேலியில் 9, கோடநாட்டில் 8, பந்தலூரில் 8, பாடந்தொரையில் 8, செருமுள்ளியில் 7, குன்னூரில் 7.5, கோத்திகிரியில் 6, சேரங்கோடு 5, உதகையில் 4.2, கேத்தியில் 3, நடுவட்டத்தில் 3, கிளன்மார்கனில் 2 மி.மீ., மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்