திருப்பூர் மாநகரில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் : பாதிக்கப்பட்டவர்கள் பள்ளியில் தங்க வைப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகரில் குடியிருப்புபகுதிக்குள் 3 இடங்களில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு மும்மூர்த்தி நகர் கருப்பராயன் நகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை பெய்ததால்,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலையில் திரண்டுமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் கூறியதாவது:

தொடர் மழையால் 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பலர் தூங்காமல், வீட்டில் இருந்த கட்டில், சேர் உள்ளிட்டவற்றில் அமர்ந்திருந்தனர்.

ஏற்கெனவே 4 ஆண்டு களுக்குமுன்பு இதேபோன்று நிலை ஏற்பட்டது. அதன் பின்னரும் எங்கள் பிரச்சினை தீர்க்கப்படாததால் தற்போது பெரும் அவதியை சந்தித்துள்ளோம்.

பாண்டியன் நகர் மேட்டுப்பகுதி மற்றும் பூலுவபட்டி சுகாதாரத்துறை அலுவலகம் அருகில் உள்ள நீர் வழிபாதையில் இருந்து வரும் நீர் வெளியேற வழியின்றி, எங்கள் பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இதற்போது மழைநீருடன், கழிவுநீரும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்திருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கொசுத்தொந்தரவும் அதிகரித்துள்ளது. ஆகவே இவற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து கலைந்தனர். இதையடுத்து வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்களை, மும்மூர்த்தி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உணவு, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பிடம்மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டு அம்மன்நகர், மகாவிஷ்ணுநகர், ஜெ.எஸ். கார்டன் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் குறுகிய அளவில்இருப்பதால் மழை நீர் செல்ல வழியின்றி வீடுகள் மற்றும் தெருக்களுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக அம்மன்நகர் பகுதியில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர்புகுந்தது. இதில் ஆத்திரமடைந்தபொது மக்கள், அங்கேரிபாளையம்சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சிசார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கின. அதேபோல் கஞ்சம்பாளையம் அறிவொளிநகர் பகுதியிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால்அப்பகுதி பொதுமக்களும் பாதிக்கப் பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்