திருப்பூர் மாவட்டத்தில் - தொடர் மழையால் நிரம்பிய குளம், குட்டைகள் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக குளம், குட்டைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

தமிழகத்தில் வழகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் காலை 5 மணி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இதன் காரணமாக அவிநாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சேவூர், செம்மாண்டம்பாளையம், குன்னத்தூர் பகுதிகளில் குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அவை நிரம்பின. ஏற்கெனவே பெய்த மழையின் காரணமாக, தடுப்பணைகள், குளம், குட்டைகள் ஓரளவு நிரம்பியிருந்தன.

கடந்த 48 மணி நேரத்தில் பெய்த மழையின் காரணமாக, அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. செம்மாண்டம்பாளையம் தடுப்பணை நிரம்பி, உபரி மழைநீர் அவிநாசி சங்கமாங்குளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

திருப்பூர் வடக்கு பகுதியான பட்டம்பாளையத்தில் கருப்பராயன் கோயில் குளம் நிரம்பியது. குளம் இடியும் நிலையில் இருப்பதால், போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 2017-ம் ஆண்டு பெய்த மழைக்கு கரை பலவீனம் அடைந்தது. இந்த நிலையில் தற்போது நல்ல மழைபெய்து வருவதால், கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டால், சேதம் தவிர்க்கப்படும். ஏற்கெனவே திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றார்.

குன்னத்தூர் அருகே உள்ள கருக்கம்பாளையம் குளமானது, கடந்த 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். உபரிநீர் வெளியேறுவதால், நல்லகட்டிபாளையம்- குன்னத்தூர்தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.வெள்ளநீர் மூழ்கடித்தபடி சென்றதால், சுமார் 3 மணிநேரம் வாகனபோக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அவிநாசியில் 18 மி.மீ, ஊத்துக்குளி 36.1 மி.மீ, காங்கயத்தி 26 மி.மீ, திருப்பூர் தெற்கு 43 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழையின் காரணமாக குளம் குட்டைகள் நிரம்பி உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்