தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த - மெகா தடுப்பூசி முகாம் நவ.14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு : சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இன்று (நவ. 6) நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் தொடர் விடுமுறை காரணமாக நவம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நவ. 6-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்திருந்தோம். எனினும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஊழியர் சங்கத்தினர் உள்ளிட்டோர், "தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருப்பதால், இந்த முகாமை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும், வடகிழக்குப் பருவமழையும் 15 மாவட்டங்களில் அதிக அளவில் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், மெகா தடுப்பூசி முகாம் நவம்பர் 14-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நூறு சதவீதம் தடுப்பூசி போட்டால் மட்டுமே கரோனா பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்கும். இதுவரை முதல் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 31 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இது நவம்பர் இறுதிக்குள் 100 சதவீதமாக உயர வேண்டும்.

மும்பையில் உள்ள டாடா நினைவு புற்றுநோய் மையம்தான், நாட்டின் பெரிய புற்றுநோய் சிகிச்சை மையமாக உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை அதற்கும் மேலாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் ரூ.118.40 கோடி யில் புற்றுநோய்க்கான மையக் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தகட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கும்போது 800 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக மாறும்.

மேலும், இந்த மருத்துவமனைக்கு மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்புடன் ரூ.180 கோடி மதிப்பில் கட்டிட வசதிகள் செய்யப்பட உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடையும்போது ஒரே நேரத்தில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். ஆதரவற்ற நிலையில் வீடுகளில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் விரைவில் சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநர் தாரஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE