சின்னசேலம் வட்டத்தில் சமூக வலைதளத்தில் பதிவான - மூதாட்டியின் பட்டா மனு மீது ஆட்சியர் உடனடி நடவடிக்கை : தர்மசங்கடமான நிலைக்கு ஆளான வருவாய்த் துறையினர்

By செய்திப்பிரிவு

105 வயதான மூதாட்டியின் வீட்டுமனை பட்டா கோரிய மனு தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளிட்ட பதிவினை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பார்வையிட்ட சில மணி நேரத்தில் அவரது வீட்டிற்கே நேரில் சென்று பட்டா வழங்கினார்

சின்னசேலம் வட்டம் கடத்தூர் கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவில் சுமார் 105 வயதுடைய மூதாட்டி முத்தாலம்மாள் என்பவர் கடந்த 30 ஆண்டுகாலமாக சிறிய கூரை வீடு கட்டி வசித்து வந்தார். அவருக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அரசின் சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010-2016-ன் கீழ் குடிசையினை அகற்றி அதற்கு பதிலாக நிரந்தர வீடு (கான்கிரீட்) கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. இருப்பினும் வீட்டிற்கான பட்டா கிடைக்கப் பெறவில்லை. இது தொடர்பாக இவ்வீட்டிற்கு வீட்டுமனை பட்டா சான்று வேண்டி மூதாட்டி மனு வழங்கியிருந்தார்.

அம்மனுமீது நடவடிக்கை எடுக்க வேண்டி மூதாட்டியின் சார்பாக சமூக ஆர்வலர்கள் மூலம் சமூக வலைதளத்தில், அம்மனு மற்றும் மூதாட்டியின் நிலை குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்பதிவினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தற்செயலாக காணும்போது, உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஆணையிட்டார்.

அதன்படி, அம்மனுவின்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உரிய ஆவணங்களின் அடிப்படையில் ஆட்சியர், மூதாட்டியின் இல்லத்திற்கே நேரில் சென்றார். மூதாட்டி கோரிய வீட்டுமனை பட்டா சான்று மற்றும் பழங்களை வழங்கினார். மேலும், மூதாட்டிக்கு அரசின் சார்பில் தகுதியுடைய அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிட அறிவுறுத்தினார்.

மூதாட்டி பல ஆண்டுகளாக பட்டாக் கோரி விண்ணப்பித்தும், வருவாய்த் துறையினர் அதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்தனர். இந் நிலையில், சமூக வலைதள பதிவு ஆட்சியரின் கண்களில் பட, அவர் உடனடியாக செயலில் இறங்கியது வருவாய்த் துறை அலுவலர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்