திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் - ஒன்றரை அடி ஆழத்துக்கு மண்ணில் புதைந்த அரசு கட்டிடம் : இடித்து அகற்றும் பணி உடனடியாக தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருப்பூர் சின்னாண்டி பாளையத் தில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம், தொடர் மழை காரணமாகசுமார் ஒன்றரை அடி ஆழத்துக்கு மண்ணில் புதைந்தது. இதையடுத்து, கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி உடனடியாக தொடங்கியது.

இதுதொடர்பாக, மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறும்போது, “இக்கட்டிடத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.29.3 கோடி மதிப்பில், கட்டுமானப் பணிகள் தொடங்கின.

திருப்பூரில் கனமழை பெய்யும் போதெல்லாம் இந்த கட்டிட வளாகத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கும். ஆண்டிபாளையத்தில் அமைந்துள்ள 70 ஏக்கர் பரப்பளவிலான குளத்துக்கு நேர் எதிரே தான் இந்த இடமும் அமைந்துள்ளது. 1910-ம் ஆண்டு அரசு ஆவணங்களின்படி, இடம் நீர்நிலையாக உள்ளது. சிலஆண்டுகளுக்கு முன்பு, அரசு ஆவணங்களில் இது நீர்நிலை இல்லை என மாற்றி, தற்போது அரசு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. சமீபத்தில் பெய்த மழையால் கட்டிடத்தை சுற்றி குளம்போல தண்ணீர் தேங்கியிருந்தது.

இந்நிலையில், கட்டிடம் மண்ணுக்குள் புதையத் தொடங்கி உள்ளது” என்றார்.

கட்டுமானத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த குளத்துபுதூர் கணேசன் கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு அனைவரிடமும் புகார் மனு அளித்தோம். குளம் போன்ற ஆழமான இடத்தில் கட்டிடம் கட்ட ஏதுவாக, பலநூறு லோடுகளுக்கும் மேலாக மண் கொட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இளகிய மண் என்பதால் சுமார் 20 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைத்தாலும், கட்டிடம் வலுவாக இருக்காது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். வழக்கை நீதிமன்றம் நிராகரித்ததுடன் அபராதமும் விதித்தது. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட, நீர் நிலைக்கான இடம் என்ற ஆதாரத்தை வைத்து, மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளோம்” என்றார்.

சம்பவ இடத்தை நேற்று நேரில் பார்வையிட்ட திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, “கட்டிடம் கட்டப்பட்டுவரும் இடம் குளம் அல்ல. இந்த இடத்துக்கு அருகே, சிறு சாக்கடை கால்வாய் மட்டுமே செல்கிறது. கட்டிடம் கட்டுவதற்கு முன்பாக அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொண்ட பின்னரே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக, பெய்த மழை காரணமாகவே சேதாரம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வெளியேற வடிகால்கள் இல்லாததுதான் இதற்கு காரணம். பொதுப்பணித்துறையினருடன் ஆலோசித்து, விரைந்து தீர்வு காணப்படும்” என்றார்.

இந்நிலையில், நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில், புதைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. பொக்லைன் உதவியுடன் கட்டிடத்தை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால், அந்த கட்டிடத்தை ஒப்பந்ததாரர் இடித்துவிட்டு புதிதாக கட்டித்தருவதாக கூறிவிட்டார். இதையடுத்து அங்கு கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. இது தொடர்பாக உரிய ஆய்வு செய்து, அங்கு மீண்டும் வலுவான கட்டிடம் கட்டப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்