விழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் கல் வீசி தாக்கப்பட்டதில் 6 அரசு பேருந்துகள் சேதமடைந்தன.
பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்திலிருந்து அரசு நகர பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தது. ஒறை யூர் அருகே பேருந்தை மர்ம ஆசாமிகள் வழிமறித்து கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்கம் கண்ணாடி உடைந்தது.பயணிகள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல்அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த குமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பேருந்து ஓட்டுநர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு (21), மாணிக்கம் (42), குணசேகரன் (65) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இது போல நேற்று முன்தினம் இரவு நாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு பேருந்து சென்றது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிதம்பரம் அருகே உள்ள பெரிய குமட்டியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் திடீரென பேருந்து மீது கல்வீசினர்.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்து பரங்கிப்பேட்டை போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் விழுப்புரம் அடுத்த அய்யங்கோயில்பட்டு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 3பேருந்துகள் மீதும், விழுப்புரம் அருகே மரகதபுதரம் பகுதியில் ஒரு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago