சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை - கூட்டுறவு சங்க கணக்கை முடக்கிய இபிஎப் நிறுவனம் : 935 விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு கிடைப்பதில் சிக்கல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கணக்கை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடக்கியதால், பயிர் காப்பீட்டின் இழப்பீடு கிடைக் காமல் 6 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் அலைந்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூர், பனங்காடி, நாட்டரசன்கோட்டை, கவுரிப்பட்டி, சென்னக்குடி, சூரக்குளம், கீழமங்கலம், மேலமங்கலம், பிரண்டைக்குளம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 935 விவசாயிகள் 2016-17-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்தனர். அந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. ஆனால் குறைவான சதவீதமே பயிர் காப்பீட்டு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இதனால் இழப்பீட்டு தொகையை உயர்த்தி தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பரிந்துரையில் 60 வருவாய்க் கிராமங்களுக்கு ரூ.10.47 கோடியை கூடுதலாக காப்பீட்டு நிறுவனம் ஒதுக்கியது.

அதன்படி நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.34 லட்சம் ஒதுக்கப்பட்டது. இத்தொகை ஒதுக்கி 6 மாதங்களுக்கு மேலாகியும் பதிவு செய்த 935 விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இதனால் அவர்கள் கூட்டுறவு சங்கத்துக்கும், வேளாண்மை அலுவலகத்துக்கும் அலைந்து வருகின்றனர். மேலும் காப்பீட்டு இழப்பீடு அறிவிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலும் வெளியிடாததால் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நாட்டரசன் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குரிய வருங்கால வைப்பு நிதியை (இபிஎப்), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லை. இதனால் சங்கத்தின் கணக்கை முடக்கிவிட்டனர்.

தற்போது வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையை செலுத்திவிட்டனர். எனவே, சங்கத்தின் கணக்கு முடக்கப்பட்டதை நீக்கி மீண்டும் செயல்பட இபிஎப் நிறுவனம் அனுமதித்ததும், விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்