ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி அவதி :

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செங்கானூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் கடந்த 2017-ம் ஆண்டு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. அந்த சுரங்கப் பாதையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கானூர் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். இருப்பினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் செங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. மேலும், தொடர் மழையால் சுரங்கப் பாதையில் கல், மண் சரிந்துள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ,மாணவிகள் பள்ளி, கல்லுரிக்கு சென்று வருகின்றனர். பொதுமக்களும் பல்வேறு தேவைகளுக்காக வெளியூர் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “அவசர காரணங்களுக்காக முதியோர் மற்றும் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல பெரிதும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. மாற்றுப் பாதை ஏற்படுத்தித் தரக் கோரி பல முறை போராட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனால், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. உடனடியாக மாற்றுப்பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE