பெரம்பலூர் மாவட்டத்தில் - 2 நீர்த்தேக்கங்கள், 6 ஏரிகள் நிரம்பின :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் 2 நீர்த்தேக்கங்கள், 6 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன.

கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட விசுவக்குடி நீர்த்தேக்கம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கொட்டரையில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்படுள்ள கொட்டரை நீர்த்தேக்கம் ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உள்ளன. விசுவகுடி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் விசுவகுடி முதல் வெங்கலம் கிராமம் வரை உள்ள பொதுமக்கள் கல்லாற்றை கடக்க வேண்டாம் எனவும், இதேபோல் கொட்டரை நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் மருதையாற்றில் வெளியேற்றப்படுவதால் கொட்டரை, ஆதனூர், கூடலூர், தொண்டப்பாடி, புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம் ஆகிய கிராமப்பகுதி மக்கள் மருதையாற்றை கடக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் அரும்பாவூர் பெரிய ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி, வடக்கலூர் ஏரி, வெண்பாவூர் ஏரி, நூத்தப்பூர் ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகிய 6 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. நெற்குணம், பேரையூர், அரும்பாவூர் சித்தேரி, பெரம்பலூர் சின்ன ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி ஆகிய 5 ஏரிகள் நிரம்பும்தருவாயில் உள்ளன. 23 ஏரிகளில் 50 சதவீதம் அளவுக்கும், 39 ஏரிகளில் 25 சதவீதம் அளவுக்கும் நீர் நிரம்பியுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி வரை பெய்ய வேண்டிய ஆண்டு சராசரி மழை அளவு 861 மி.மீ ஆகும். நிகழாண்டு நேற்றைய நிலவரப்படி இம்மாவட்டத்தில் 905 மி.மீ மழை பதிவாகியுள்ளதன் மூலம் ஆண்டு சராசரி மழை அளவை 58 நாட்களுக்கு முன்பே எட்டிவிட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிவரை பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்): லப்பைக்குடிகாடு 110, எறையூர் 104, அகரம் சீகூர் 98, புதுவேட்டக்குடி 87, வேப்பந்தட்டை 69, வி.களத்தூர், பெரம்பலூர் தலா 63, தழுதாளை 40, பாடாலூர் 21, செட்டிக்குளம் 18, கிருஷ்ணாபுரம் 12.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்