திருச்சியில் போலீஸ் எனக்கூறி முதியவரிடம் இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் நகர் கலைஞர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (63). இவர் கடந்த 1-ம் தேதி இரவு கரூர் பைபாஸ் சாலையில் அன்பில் தர்மலிங்கம் சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சீருடை அணியாத ஒருவர், தன்னை கோட்டை காவல்நிலைய காவலர் எனவும், போக்குவரத்து விதிகளை மீறி வந்ததால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த வாகனத்தை கோட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்வதாகவும், மறுநாள் அங்குவந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ராஜ்குமார் அந்த நபரிடம் தனது இருசக்கர வாகனத்தைக் கொடுத்துவிட்டு, நவ.2-ம் தேதி கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போதுதான், தனது வாகனத்தை காவலர் யாரும் பறிமுதல் செய்யவில்லை எனவும், மர்ம நபர் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில் உறையூர் செபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (40) என்பவர், போலீஸ் எனக்கூறி ராஜ்குமாரிடம் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீஸார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago