தமிழகத்தில் குழந்தைகள் நலனுக்கு என, தனியாக குழந்தைகள் கொள்கையை வரும் 20-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சமூக நலத்துறை என்பது பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் திருநங்கைகளுக்கான ஒரு துறையாக, அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும், திட்டங்களின் பயன்கள் தகுதியான நபர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். காவல் துறை குற்றத்தடுப்பு பிரிவோடு இணைந்து சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
குழந்தைகள் நலனை பாதுகாக்கும் வகையில், வரும் 20-ம் தேதி தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கையை முதல்வர் வெளியிடவுள்ளார். குழந்தைகளின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்தை குழந்தை நேய மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது தான் இந்த கொள்கையின் முக்கிய அம்சங்கள். இதேபோல சமூக நலத்துறை சார்பில் மாநில பெண்கள் கொள்கை, முதியோர் கொள்கை போன்ற கொள்கைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொள்கைகளும் விரைவில் வெளியிடப்படும் என்றார் அமைச்சர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago