கடலில் மிதவைக் கூண்டில் வளர்ப்பு - சிப்பிக்குளத்தில் 1.5 டன் கடல் விரால் அறுவடை : ஏற்றுமதி செய்ய முடியாத நிலையால் குறைந்த விலைக்கு விற்பனை

கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு, மாற்றுத் தொழிலாக கடலிலேயே மீன் வளர்க்கும் திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம் சார்பில் இந்த திட்டம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம், தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளம், கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சிப்பிகுளம் கடலில் 20 மிதவைக் கூண்டுகள் அமைக்கப்பட்டு கடல் விரால், கொடுவா, சிங்கி இறால் வளர்க்கப்பட்டு வருகின்றன. சீனா நாட்டின் வருடப்பிறப்பின்போது, அங்கு சிங்கி இறால் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கொடுவா, கடல் விரால் ஆகியவற்றை மட்டும் மிதவைக் கூண்டுகளில் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு மிதவை கூண்டுகளில் விடப்பட்ட கடல் விரால்களின் முதற்கட்ட அறுவடை நேற்று நடந்தது. ஒன்றரை டன் கடல் விரால் அறுவடை செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வளர்ச்சி காலம் 8 மாதம்

மீனவர் ஆர்.ரெக்சன் கூறும்போது, “சிப்பிகுளம் கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் மிதவை கூண்டு அமைத்து, மீன்கள் வளர்த்து வருகிறோம். 750 குஞ்சுகள் விட்டோம். ஒவ்வொரு குஞ்சும் சுமார் 15 கிராம் எடை கொண்டதாக இருந்தது. ஒரு கடல் விரால் குஞ்சு ரூ.30-க்கு வாங்கினோம். இதன் வளர்ச்சி காலம் 8 மாதங்கள்.

காலை, மாலை என இரண்டு வேளைகளும் உணவு வழங்குவோம். 2 மாதங்களுக்கு ஒரு முறை மிதவைக் கூண்டில் உள்ள வளைகளை மாற்றுவோம். 2 வாரங்களுக்கு ஒரு முறை வளையை சுத்தப்படுத்துவோம். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மிதவை கூண்டுகளில் விட்டு வளர்க்கப்பட்ட கடல் விரால் வளர்ச்சி நன்றாக உள்ளது. முதற்கட்ட அறுவடையில் ஒன்றரை டன் கிடைத்துள்ளது. ஒரு மீன் சுமார் 3.5 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கிறது.

கிலோ ரூ.350

தற்போது ஒரு கிலோ ரூ.350 என வியாபாரிகளால் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலை என்பது போதுமானது இல்லை. ஏனென்றால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கடல் விரால் கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்துள்ளோம். கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் தான் விலை குறைவாக உள்ளது. ஏற்றுமதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் விலை அதிகரிக்கும்.

அதேபோல், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கி இறால் வளர்க்கவில்லை. அது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இங்கு அதற்குரிய விலை கிடைக்காது என்பதால் தான், சிங்கி இறாலை வளர்க்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்