வேலூர் நறுவீ மருத்துவமனையில் - உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடக்கம் : மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் (Organ Trans plantation Centre) தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மருத்துவமனையின் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்தார்.

இது குறித்து அவர், செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட் கட்டமைப்பு வசதிகளை கொண்டு இயங்கி வரும் நறுவீ மருத்துவமனையின் புதிய சிறப்பு அம்சமாக, இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்க அரசிடம் விண்ணப்பித்திருந்தோம். அதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது.

அதன்படி, வேலூர் நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்காக பொது மக்கள் யாரேனும் உடல் உறுப்புகள் மாற்று பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அவர்கள் அரசின் விதிமுறைப்படி முறையாக விண்ணப்பித்து இங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். மருத்துவமனை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை இம் மருத்துவமனை பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும்.

பிரபல தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் தென் இந்தியாவிலேயே வேலூர் நறுவீ மருத்துவமனை வளர்ந்து வரும் மருத்துவமனைகளில் முதன்மையாகவும், சென்னை மண்டலத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக உள்ளது.

இந்த சாதனை நறுவீ மருத்துவ மனையின் இன்னொரு மைல்கல் ஆகும். இந்த மருத்துவமனையில் இதுவரை 30 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இம் மருத்துவமனைக்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, அசாம், மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பங்களாதேஷ் உள்ளிட்ட வெளி நாட்டு நோயாளிகளும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். சமீபத்தில் சூடான் நாட்டில் நறுவீமருத்துவமனைக்காக புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது, மருத் துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர்.அரவிந்தன்நாயர், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நித்தின் சம்பத் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்