நூல் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

ஜவுளித் தொழிலுக்கு மூலப்பொருளான பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பின்னலாடை மற்றும் விசைத்தறிதொழிலுக்கு ஆதாரமான பருத்திநூல் விலை, ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 20, 25, 30, 34, 40 என ரக வாரியாக நூல்களின் விலை அதிகபட்சம் ரூ.80 வரை சந்தையில் உயர்த்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வு ஜவுளித் தொழிலில் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களை பாதிக்கும். தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கன்டெய்னர் பற்றாக்குறை காரணமாக சரக்கு அனுப்பும் கட்டணம் 4,000 டாலரில் இருந்து 20,000 டாலராக அதிகரித்துள்ள நிலையில், நூல் விலை உயர்வு பின்னலாடை ஏற்றுமதி தொழில் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் நியாயமான விலையில் நூல் கிடைக்கும் வகையில் தமிழக பருத்தி கார்ப்பரேஷனை அரசு அமைக்க வேண்டும். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் நூல்விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, ஜவுளித் தொழில் சீரான முறையில் இயங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE